Saturday, February 13, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

ஒரு வீட்டில்

ரோஜாத் தோட்டம்

ஒரு வீட்டில்

ஜன்னலில் பூமரம்

ஒரு வீட்டில்
ஒளிந்து கொள்ளும் கதவிடுக்கு


ஒரு வீட்டில்
மூன்று சக்கர சைக்கிள்


ஒரு வீட்டில்
பரணில் செப்பு


ஒரு வீட்டில்
கூடிப் பேசும் கல்முற்றம்


ஒரு வீட்டில்
செல்லச் சிட்டுக் குருவியின் கூடு


ஒரு வீட்டுச் சுவரில்
அப்பாவின் தலைமுடி எண்ணெய்


இப்படி இருப்பை உணர்த்துதலுக்கு
எதையேனும் விட்டுச் செல்ல வேண்டும் போல...


இப்படி விட்டுச் செல்வதை உணர்த்தவும்
எதையேனும் எடுத்துச் செல்ல வேண்டும் போல...


வீடுகள் மாறிக் கொண்டே
வீடுகளைச் சுமந்தேன்


மீண்டும் ஒரு தேடல்...
'வீடு வாடகைக்கு விடப்படும்'

மீண்டும் ஒரு மாற்றம்...

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

No comments:

Post a Comment