Sunday, September 20, 2009

காதலினால் தோற்கப் போகும் காதல்...........

காதலினால் தோற்கப் போகும் காதல்...........



அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்
எதிர்பார்ப்புகளின்றி இருக்கமுடியாமல்
மனம் காதலிடம் தோற்றுப் போய்
அனிச்சையாய் கொஞ்சம் விலகிப்
போய் நின்று கொண்டது......

நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக் கொண்டது.........

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....
காற்று பறக்க மறந்து
நடந்து சென்றது....

நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்

இவ்வாறு நினைத்த மாத்திரத்தில்
உருவாகிய சுனாமி
அழித்துப் போன உலக
வரை படத்தில் மனமும்
இணைந்து கொண்டது.....

இதயத்தின் மூலை முடுக்கெல்லாம்
மனதைத் தேடிப் பார்த்துச் சலித்து
இல்லாத மனம் ஏற்படுத்திய
வெற்றிடம் ரணகளமாகியது........

வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......

தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................

1 comment:

  1. வெற்றிடங்கள் நிரப்பும்
    வித்தையை அறிந்தால்
    தெரிந்தால் சொல்லிப் போங்கள்
    என வருவோர் போவோரிடம்
    கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......

    தோள்களின் இருபக்கமும்
    தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
    தேவதைச் சிறகுகள் ஒன்றும்
    முளைத்திருக்கவில்லை................

    valiyin vethanai purigirathu...

    ReplyDelete