Friday, December 25, 2009

மழை பொழிந்தது இங்கே!




நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது....
பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது..........
பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!

சூரியன் குடிக்கலாம் வாங்க!

கொஞ்சம் சூரியன் குடிக்க
கைகளை நீட்டிக்
கையில் எடுக்கக்
கையிடுக்கில் நிற்காமல்
நழுவி ஓடியது சூரியன்.........

வெயில் மினு மினுக்கும்
ஆற்று நீரைச் சொன்னேன்!

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் -1

படித்துத் தூக்கியெறியும் பத்திரிக்கையும்..........
ஜோடி பிரிந்திருக்கும் செருப்பும்....
கொடிச் சேலையும்,திரைச்சீலையும்,
ஆங்காங்கே கிடக்கும் தலையணையுமாய்,
திறந்திருக்கும் ஜன்னல் கொண்டு வந்தசருகும் ........
கூடு கட்டப் பறக்கும் குருவி உதிர்த்த
சிறகுமாய் ....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்.................

ஓடி ஓடிப் போட்டுக் கொள்ளும் பவுடரும் லிப்ஸ்டிக்குமாய்...........
இடம் மாறிக் கொள்ளும் இருக்கைகளும்,திரைச்சீலைகளும்.............
இடுக்குகளுக்குள் ஒளிந்து கொள்ளும் பத்திரிக்கைகளும்.....
கொடிகளுக்கு விடுதலையளிக்கும் சேலைகளும்....
அலமாரிகளுக்குள் முடக்கப்படும்
எண்ணெய் சீசாக்களும்,சீப்புக்களும்......
உடைமாற்றிக் கொள்ளும் கட்டில்களும்
தலயணை உறைகளும்....................
உதறி விரிக்கப்படும் மிதியடிகளும்,
ஜோடி சேர்க்கப் படும் செருப்புகளும்
நேர்ப்படுத்திக் கொண்டேயிருக்கும் வீடுகள்.............

கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................
ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!

என்றேனும் பசுமையாய் இருந்திருப்பேன்...

என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....

இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....

இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............

என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......