Friday, December 25, 2009

மழை பொழிந்தது இங்கே!




நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது....
பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது..........
பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!

சூரியன் குடிக்கலாம் வாங்க!

கொஞ்சம் சூரியன் குடிக்க
கைகளை நீட்டிக்
கையில் எடுக்கக்
கையிடுக்கில் நிற்காமல்
நழுவி ஓடியது சூரியன்.........

வெயில் மினு மினுக்கும்
ஆற்று நீரைச் சொன்னேன்!

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள் -1

படித்துத் தூக்கியெறியும் பத்திரிக்கையும்..........
ஜோடி பிரிந்திருக்கும் செருப்பும்....
கொடிச் சேலையும்,திரைச்சீலையும்,
ஆங்காங்கே கிடக்கும் தலையணையுமாய்,
திறந்திருக்கும் ஜன்னல் கொண்டு வந்தசருகும் ........
கூடு கட்டப் பறக்கும் குருவி உதிர்த்த
சிறகுமாய் ....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்.................

ஓடி ஓடிப் போட்டுக் கொள்ளும் பவுடரும் லிப்ஸ்டிக்குமாய்...........
இடம் மாறிக் கொள்ளும் இருக்கைகளும்,திரைச்சீலைகளும்.............
இடுக்குகளுக்குள் ஒளிந்து கொள்ளும் பத்திரிக்கைகளும்.....
கொடிகளுக்கு விடுதலையளிக்கும் சேலைகளும்....
அலமாரிகளுக்குள் முடக்கப்படும்
எண்ணெய் சீசாக்களும்,சீப்புக்களும்......
உடைமாற்றிக் கொள்ளும் கட்டில்களும்
தலயணை உறைகளும்....................
உதறி விரிக்கப்படும் மிதியடிகளும்,
ஜோடி சேர்க்கப் படும் செருப்புகளும்
நேர்ப்படுத்திக் கொண்டேயிருக்கும் வீடுகள்.............

கலைவதும் நேர்ப்படுத்துவதுமான தினசரி
இயக்கங்களைச் சுமந்தபடி
அசையாமல் நின்றது வீடு.................
ம்ம்ம்.........வீட்டிலிருப்பது போரடிக்கிறது!

என்றேனும் பசுமையாய் இருந்திருப்பேன்...

என் கிளைகளில்
என்றேனும் பூக்க்கள் ஊஞ்சலாடியிருக்கும்...
என் வேர்களில் ஈரம் இணைந்திருந்திருக்கும்
என் மடியில் கவிழ்பூக்கள் நூறு முத்தமிட்டிருக்கலாம்.....
என் நிழலில் ஒரு குடும்பம் சிரித்துப் பேசியிருக்கலாம்.....

இலைகளையும் பூக்களையும் உதிரவிடாமல்
காவல் காக்கவுமில்லை
நான் பசுமையாய் இருந்த
நிமிடங்களைச் சேகரிக்கவும் இல்லை.....

இப்போதிந்த இளைப்பாறும்
பறவைகளில்லாக் கிளைகளும்
பூவாசமில்லாத் தனிமையும்
பூக்களின் போதையில்லாத
இலையசையா நிசப்தமும்....
பயமாயிருக்கிறது.............

என் செய்ய? கூடியிருக்க.........
எங்களுக்கில்லை முதியோர் இல்லங்கள்.......

Sunday, September 20, 2009

காதலினால் தோற்கப் போகும் காதல்...........

காதலினால் தோற்கப் போகும் காதல்...........



அளவற்ற அமிர்தமும் விஷமாகும் போது
அளவற்ற நேசமும் தானே விஷமாகும்
எதிர்பார்ப்புகளின்றி இருக்கமுடியாமல்
மனம் காதலிடம் தோற்றுப் போய்
அனிச்சையாய் கொஞ்சம் விலகிப்
போய் நின்று கொண்டது......

நிசப்தம் அலறுகிறது காதுக்குள்
சப்தம் மௌனமாக இருக்கிறது
வானம் புள்ளியாய்த் தன்னைச்
சுருக்கிக் கொண்டது.........

மழை அழ மறந்து
சிரித்துக் கொண்டிருந்தது....
காற்று பறக்க மறந்து
நடந்து சென்றது....

நிபந்தனையற்ற அன்புக்குக்
கனவை மட்டுமல்ல
காதலையும் கூடக்
காணிக்கையாக்கி
விடவேண்டியதுதான்

இவ்வாறு நினைத்த மாத்திரத்தில்
உருவாகிய சுனாமி
அழித்துப் போன உலக
வரை படத்தில் மனமும்
இணைந்து கொண்டது.....

இதயத்தின் மூலை முடுக்கெல்லாம்
மனதைத் தேடிப் பார்த்துச் சலித்து
இல்லாத மனம் ஏற்படுத்திய
வெற்றிடம் ரணகளமாகியது........

வெற்றிடங்கள் நிரப்பும்
வித்தையை அறிந்தால்
தெரிந்தால் சொல்லிப் போங்கள்
என வருவோர் போவோரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தது மனம்......

தோள்களின் இருபக்கமும்
தடவிப் பார்த்துக் கொண்டேன்.....
தேவதைச் சிறகுகள் ஒன்றும்
முளைத்திருக்கவில்லை...................

Saturday, September 19, 2009

இதுவும் கடந்து போகும்......

இதுவும் கடந்து போகும்......

" நான்" எனும் பாதரசம் பூசிய
மாயக் கண்ணாடி மனம்.....

முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?

மாயக் கண்ணாடி
அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை

தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது
அந்த அடைமழையில்
நனையும் வரை

அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி

ஹா..............
அழகிய உலகம் தெரிந்தது முன்னாடி...!!!!

உதிர்ந்த ஒற்றைச் சிறகு..........

உதிர்ந்த ஒற்றைச் சிறகு..........


மனதின் பட்டாம்
பூச்சியின் சிறகுகள்
இன்று ஏனோ
திறந்தே இருக்கின்றன...

நிதம் பல
யுத்தங்கள் செய்யும்
அவை இனறு ஏன்
மௌனங்களை
அறிமுகப் படுத்துகின்றன..

என் வானம்
முழுவதுமாய் உடைந்து
போன நிலவுத் துண்டுகள்
சிதறிக் கிடக்கிறது..........

பறக்கப் பார்க்கும்
உதிர்ந்த சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி
எனக்கு உகந்ததல்ல......

நான் நானாக
இருக்கப் பார்க்கிறேன்.....
வித்தை வசமாகவில்லை
என்பதுதான் வருத்தம்......

Saturday, September 5, 2009

சேகரித்த அன்பு = செலவழித்த அன்பு

சேகரித்த அன்பு = செலவழித்த அன்பு

மேகம்
உள்வாங்கிச் சேகரித்த நீரும்
செலவழித்த சில்லறை மழையும்

கடல்
கொண்டு சேர்க்கும் அலையும்
திருப்பி எடுத்துப் போகும் அலையும்

பேசிச் சேகரித்த நேரமும்
சண்டையில் தொலைத்த நேரமும்

தூங்கிச் சேகரித்த கனவுகளும்
தூங்காமல் தொலைத்த இரவுகளும்

சிரித்துச் சேகரித்த நட்புகளும்
அழுது தொலைத்த உறவுகளும்

மனம்
அள்ளிச் சேகரித்த அன்பும்
துள்ளிச் செலவழித்த அன்பும்

கடந்து போன பகல்களும்
கரைந்து போன இரவுகளும்

போல் எப்போதும்
சமன்பாடு சரியாகுவதில்லை!!

ஆனாலும்
எப்போதும் போல் மீண்டும்
செலவழிக்கவும் சேகரிக்கவும்
தயாராகினேன்......

இது யூத்ஃபுல் விகடனில்.....

மழைக்கு என்னைப் பிடிக்கும்.......

மழைக்கு என்னைப் பிடிக்கும்.......

இந்தக் கவிதை YOUTHFUL VIKADANIL.....!!!!!
ரயில் பயணங்களில்....

ஜன்னலில் கூடவே
ஓடி வரும்
நிலவு

கூந்தல் கலைத்து
வருடி வரும்
காற்று

கன்னம் சிலிர்க்க
சிரித்துத் தெளிக்கும்
சாரல் மழை

கையசைத்து விடை கொடுத்து
வழியனுப்பாமல் கூடவே
வந்ததால்

எனக்குப் புரிந்தது
நிலவுக்கு
காற்றுக்கு
மழைக்கும்
என்னைப் பிடிக்கும் என்று!!!!

இயல்புக்கு மாறாக ........

இயல்புக்கு மாறாக ........

அதிகாலை பெய்த
அந்தப் பெருமழையில்
உதிர்ந்து கிடந்த
இலையும் பூக்களும் திடீரென்று
நீந்தக் கற்றுக் கொண்டன

அடை மழையின் பெருந்துளிகளால்
உறங்கிக் கிடந்த
நீர்க் குமிழிகள் சட்டென்று
விழித்துக் கொண்டன

துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது.....

இயல்புக்கு மாறாக ..............
அடித்துப் பெய்யும் மழையில்
குடை வைத்துக் கொண்டு
நனைந்து போகும் என்னைப்
பரிதாபமாகப் பார்த்தார்கள்
அவர்கள்!!