Sunday, October 24, 2010

ஸ்பரிசம்


குட்டிம்மாவின் பிறப்பில்
தேவதை இறக்கைகளுக்கான
தேடல் ஆரம்பம்...

ரோஜா நிறக் குட்டிக் கால்
கண்டதுமே சின்ட்ரெல்லாவின்
தொலைந்த காலணியைத் தேட
ஆரம்பித்தது மனது...

பயத்தில் குட்டிம்மாவின் கை
இறுக்கத்திலும் முதுகுப் பின்
மறைவிலும்
கடவுளானேன் சிலநேரம்...

எனதுடையணிந்து
என் முன் நிற்கும் போது
என் முற்றத்தில்
எனக்கான மழை

கண்ணாடிக் கைவளையோசையும்
சுவரில் நெற்றிப் பொட்டும்
மொட்டு சத்தமில்லாமல் மலர்வதைக்
கொஞ்சம் சத்தமாகவே சொல்லியது...

யாரையோ மணமகனாக்கி
உடன் ஏற்றி
ரயில் நகரும் போது
அவசரமாய்த் தொட்டுக்
கோர்த்துக் கொள்ளும் கைகளின்
ஸ்பரிசம்...

கைகளில் ஒட்டிக் கொண்டு வீடு
வந்து சேர்ந்து அழ வைத்தது...

வீடு முழுவதும் நீ செய்த
ப்ளாஸ்டிக் பூக்களும்
சுவர் கிறுக்கல்களும்
கொடியில் தொங்கும்
சூடிதார்களும்
கண்ணாடியில் ஸ்டிக்கர்
பொட்டுமாய்
கைநிறைய உன் பிரிவு
ஸ்பரிசமுமாய்...
கண் நிறைய ஒளித்து
வைத்த மழையுமாய்
அம்மா...

எப்போதாவாது யாரேனும் உணரலாம்....

எப்போதாவது முற்றத்தில்
வந்து விழும்
தூங்கணாங் குருவிக் கூடு
சொன்ன கதையும்.

தினம் உதிர்ந்து
குப்பைக்குப் போகும்
பூக்களும் இலைகளும்
சொன்ன கதையும்

வேறு வேறாயிருந்தாலும்

தார்ரோட்டில் தெரியாமல்
விழுந்து ஒட்டிக் கொண்ட
காலடித் தடங்கள்
சிக்கி கொண்டு சொன்ன கதையும்

வெட்டப் பட்ட மரம்
மண்ணுக்கடியில்
விட்டுச் சென்ற வேர்கள்
சொன்ன கதையும்

வேறு வேறாயிருந்தாலும்

மரித்துப் போன பட்டாம்பூச்சியை
இடம் பெயர்த்துத் தூக்கிப் போன
எறும்புக் கூட்டம் சொன்ன கதையில்

யாரேனும் உணரக் கூடும்
எல்லாக் கதைகளையும்.....

வீழ்ந்து கிடக்கும் நிழல்கள்!

இரவில்
விளக்கின் காலடியிலும்

பகலில்
சூரியனின் காலடியிலும்

நிழல்கள் எப்போதும் போல
விழுந்து கிடந்தன....

உச்சி வெயிலில்
என் காலடியில்
நசுங்கிக் கிடந்ததுவும்
அதுவேதான்..

வெளிச்சத்தை எதிர்த்துப்
பழக்கமில்லா நிழல்கள்
எப்போதும் வீழ்ந்து
கிடந்தாலும்...

மெழுகுவர்த்தியின்
வெளிச்சத்துக்கு
மட்டும் சுவற்றில்
எழுந்தாடும்
என் நிழல்
என்னிடம் கேட்டது ....

முகமில்லா என்னைப்
பிடித்திருக்கிறதாவென்று?

விட்டுப் போய்விடுமோவென்று
சுவற்றோடு போய் ஒட்டிக் கொண்டேன்....
சட்டெனக் காணாமல் ஓடி மறைந்தது
எப்போதும் வீழ்ந்து கிடக்கும் அது!

கை விரித்துச் சிரித்தது மரம்!!

கீழே விழுந்த பந்து
எம்பி எழுந்து வந்ததைப்
பார்த்து இறகை உதிர்த்து
விட்டுக் காத்திருக்கிறது
ஏமாறப் போகும் பறவை!

தானே கீழே விழுந்த மழை
இனி எப்போ மேலே
போவோமெனச் சூரியனைப்
பார்த்துச் சிரித்துக் கிடந்தது
குளத்தில்....

அடித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!

ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று
கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!!

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-4

அண்ணாவுக்குக் கல்யாணம்
முன் யோசனையுடன் முன் ரூம்
அண்ணா அண்ணிக்கும்
எழுதிக் கொடுக்கப் பட்டது...

தம்பிக்குக் கல்யாணம்
சமயோசிதமாய்ப் பின் ரூம்
தம்பிக்கும் மாலினிக்குமாய்
பத்திரப் படுத்தப் பட்டது....

ஒன்றும் சொல்லாமல்
அம்மாவும் அப்பாவும்
ஹாலுக்கு
இடம் பெயர்ந்து
கொண்டார்கள்.........

ஹாலிலிருந்து
பாட்டி வீடு ரெண்டு படும்படிக்
கத்திக் கொண்டே
பூனையை விரட்டி
மாடிப்படிக்கு அடியில்
குடி கொண்டாள்..............

பாட்டியும் அப்பாவும்
அடுத்தடுத்து படத்துக்குள்
நுழைந்து பொட்டும் பூவும்
வைத்துச் சாமியாகிப்
போனார்கள்

அதற்கப்புறமான அதிகாலையில்
யாரும் சொல்லாமலேயே
அம்மா அமைதியாக
மாடிப்படிக்குக் கீழே
முகம் மறைத்துக் கொண்டாள்

எல்லோருக்கும் பொதுவான
வீடு மட்டும் எப்போதும் போல
கலைந்து கொண்டேயிருந்தது........

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....

 எதிர்பாரா மழைக்கு
அடுப்படியில் ஒன்றும
முன்னறையில் ஒன்றுமாய்
பாத்திரம் வைத்துப்
பத்திரப் படுத்தியாயிற்று மழையை....

அதிசயிக்கும் மழையைச்
சபித்துக் கொண்டே
பின்கட்டுக்கு ஒரு சாக்கும்
முன் வாசலில் ஒரு சாக்கும்
போட்டு  மழைத் தண்ணியைத்
தடுத்தாயிற்று

இன்னும் மழையிலிருந்து தப்பிக்க
புத்தகப் பைகளும்
துணிமூட்டைகளும்
சோற்றுப் பாத்திரமும்
இடம் மாறிக் கொண்டேயிருந்தன.....

மழை கொஞ்சம் அடித்துப் பெய்ய...
கையில் கிடைத்த அண்டா குண்டா
எடுத்து ஓடி ஓடி இடம் மாற்றி
பூனைக் குட்டிக்கொரு
ஈரமில்லாஇடம் தேடி.....

 ரசிக்க முடியாத
மண்வாசனையுடன்....
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்....

உடனடித் தேவை....

என்னை இழுத்துச் செல்லும் ஒரு நதியும்
பறவையிறகு போல் மிதக்கச் செய்யும் காற்றும்
நிமிர்ந்து பார்க்க ஒரு வானமும்
உடனடித் தேவை....

நினைத்ததைக் கொடுக்கும் ஜீ பூம்பா பூதங்கள் சிலவும்
சொர்க்கத்துக்கு வழி தெரிந்த தேவதைகளும்
உண்மை பேசிக் கொள்ளும் மனிதர்களும்
உடனடித் தேவை....

கொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்
கொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்
நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....
பிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக
சில வண்ணத்துப் பூச்சிகளும்.......
உடனடித் தேவை....